Sunday 7 October 2012

மகனை காணவில்லை

        1973 ல் தனிப்பிரிவு ஆயிவளராக திரு கணேசன் அவர்கள் வந்தார்கள்.மிகவும் நல்லவர் வல்லவர். எல்லோரையும் அனைத்து வேலை வாங்குவதிலும் அறிவுரைகள் கொடுப்பதிலும் அவருக்கு அவரே நிகர். அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். மேலும் நான் தனிப்பிரிவு அலுவல்களில் அதிகமாக நல்ல விசயங்களை கற்றுகொண்டது இவர்களிடம்தான். இந்த வருடம் எனது பெயர் பதவி உயர்வு போர்டுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. ஆனால் என்னுடன் பணிபுரிந்த திரு காளிமுத்து, சுப்பையா பாண்டியன் போன்றோருக்கு பரிந்துரை செய்யப்படிருந்தது. இது எனக்கு மிகவும் வருத்தமாகவும் இருந்தது. இருப்பினும் நான் எனது பணியில் மிகவும் கவனமாகவும் திறமையுடனும் செய்துவந்தேன். எனது பணி காலத்தில் எந்தவொரு சிறு தவறுகூட கிடையாது.

மகனை காணவில்லை 
               
               மகன் முத்துக்குமரனை திருசெந்தூரில் ஒரு பள்ளியில் L.K.G.யில் சேர்த்துவிட்டேன். நன்றாக படித்துவந்தான். ஒருநாள் சாயங்காலம் நானும் எனது மனைவியும் மகன் முத்துக்குமரனும் கோயிலுக்கு சென்றோம். . திரும்பி வரும்போது எங்கள் பின்னாலேயே வந்த மகனை காணவில்லை. திரும்பி கடைக்கு ஓடினோம். எங்குமே காணவில்லை. எனக்கு ஒரே பதட்டமாக இருந்தது. இருவரும் பஸ் மற்றும் கார்களில் எல்லாம் தேடினோம். எங்கெல்லாமோ தேடினோம். மகனை கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒருவாறு மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டிற்கு அழைத்துவந்தேன். நங்கள் விட்டிற்கு வந்தோம். என் அம்மாவிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் பதறியபடி வந்தோம். என் அம்மா  என் மகனை எங்கே என்று கேட்டார்கள். என் மனைவி அழுததை பார்த்து  விட்டில் உள்ளே இருந்து ஓடி வந்தான். வீட்டிற்கு  எப்படி வந்தாய் ? என்று கேட்டதற்கு ஒரு கடையில் பத்தியும் மெழுகுவர்த்தியும் வாங்கிவிட்டு உங்களை பார்த்தேன் காணவில்லை அலுத்து கொண்டிருந்தேன். ஒரு  போலீஸ் மாமா கூட்டிவந்தார் என்று சொன்னான். என்னோடு வேலை பார்க்கும் யாரோ ஒரு போலீஸ் அவனை கூட்டி வந்தது தெரிந்து கொண்டோம். எங்களுக்கு அப்பொழுதுதான் நிம்மதி வநதது. என் அம்மா எங்களை மிகவும் திட்டி தீர்த்து விட்டார்கள்.


             ஒரு சமயம் திருசெந்தூர் கோயிலுக்கு தூத்துக்குடி  தனிப்பிரிவு புலனாய்வுத்துறை உதவி ஆயிவாளர் திரு இருமன்குலம் சுப்பையா தேவர் அவர்கள் வந்தார்கள். அவர்களை கோயிலுக்கு அழைத்துசென்று சாமி தரிசனம் செய்ய உதவியாக அனுமதி சீட்டு   வாங்கி கொடுத்து எல்லா ஏற்பாடுகளும் செய்தேன். அவருக்கு ரொம்பவும் சந்தோசம். தனிப்பிரிவு வேலை எப்படி இருக்கிறது, தூத்துக்குடியில் தனிப்பிரிவு புலனாய்வுத்துறை தலைமை காவலர்  திரு முப்பிடாதி மாற்றி போகப்போகிறார். அந்த இடத்திற்கு நீங்கள் வரலாமா என்று கேட்டார்கள். எனக்கு பதவி உயர்வு கிடைக்காத வருத்தமும் இருந்ததால் நான் வருகிறேன் என்று சொன்னேன். உடனே என்னிடம் எழுதிவாங்கினார்கள். அவர் சொன்னதுபோல் ஒரு மாதத்தில் துத்துக்குடிS.B.C.I.D க்கு  மாறுதல் உத்தரவு வந்துவிட்டது. வீட்டில் வந்து சொன்னேன் மனைவிக்கு ரொம்பவும் சந்தோசம். ஒரு வாரம் கழித்து மாறுதல் உத்தரவு பெற்றேன். தூத்துக்குடி  வந்து சித்தப்பா திரு ராமசாமி அவர்கள்  வீட்டில் சொன்னேன். அங்கு எல்லோருக்கும் ரொம்பவும் சந்தோசம்.

Saturday 6 October 2012

தனிப்பிரிவு புதிய ஆய்வாளர் !

             புதிய ஆயிவாளர் திரு மாணிக்கம் அவர்கள் மிகவும் திறமையானவர் மட்டுமில்லை எதற்கும் பதட்டப் படமாட்டார். புதிய ஆயிவாளர் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். ஆயிவாளர் திரு விஜயரமச்சந்திரன் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விஷயம் நேரடி விசாரணைக்கு (O.E) வந்தது. அதில் பாதிக்கப்பட்ட ஆயிவாளர் திரு விஜய  ராமச்சந்திரன் அவர்கள் என்னை சாட்சியாக போட்டிருந்தார். அதை பார்த்தவுடன் எஸ்.பி அவர்கள் என்னை அழைத்து உன்னை ஏன் சாட்சியாக போட்டுள்ளார் நீ  என்ன சொல்லவேண்டும் என்று அவரிடம் கேட்டு விட்டு வா. என்று சொன்னார்கள். நான் அவரிடம் போய் கேட்டேன். அவர்கள் அந்த சமயம் நான் கேட்பதற்கு நீ  பதில் சொன்னால் போதும்  என்று சொல்லிவிட்டார். அதை நான் எஸ்.பி.அவர்களிடம் போய் சொன்னேன். ஆனால்அந்த விசாரணைக்கு  என்னை சாட்சியாக அழைக்கவில்லை. ஒரு வருடம் கழித்து எஸ்.பி. திரு சி.துரைராஜ் அவர்கள் மாற்றபட்டு திரு கே.குருவையா அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கும் ஆயிவாளர் திரு மாணிக்கம் அவர்களுக்கும் நல்ல தொடர்பு உண்டு. ஆகையால் மாவட்டத்தில் எது நடந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து எந்த பிரச்சினைகளும் இல்லாமல் இருந்தது. அந்த சமயம் நடந்த சட்டசபை மற்றும் உள்ளாட்சித்துறை தேர்வுகள் எதிபார்த்தபடி நல்லமுறையில் நடந்தது..



Saturday 10 December 2011

தனிப்பிரிவுக்கு (special branch C.I.D) மாறுதல்:

அப்போது.....

                           தாரங்கதாரா கெமிக்கல் கம்பெனிக்கு வந்து அதன் துணைத்தலைவர் திரு M.A.ராமசாமி அவர்களை சந்தித்து மரியாதை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். அப்பால் ஒர்க்ஸ் மேனேஜர் திரு சித்தாராமையா அவர்களையும், ஆபீஸ் சூப்பிரண்டு திரு ஹரிஹரன் அவர்களையும் சந்தித்தேன். அவர்களது அறிவுரையின்படி பாதுகாப்பு தலைவர் திரு B.J.கருணாகரன்(A.D.S.P.,Reted.) அவர்களை சந்தித்தேன். அவர் நான் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் டூட்டி  செய்யும்போது தக்கலை காவல் துணை கண்காணிப்பாளராக இருதார்.அவர்களுக்கு மரியாதை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். கம்யுனிஸ்ட்  சங்க தலைவர் திரு S.I.சங்கரன், I.N.T.U.C.சங்க தலைவர் திரு கந்தசாமி மற்றும் தி.மு.க.சங்க தலைவர் ஆத்தூர் சண்முகம் ஆகியோர்களையும் சந்தித்து தொழிலாளர்களின் கோரிக்கை பற்றி விசாரித்தேன்.ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு தங்கரோஸ் அவர்களையும் சந்தித்து தொழிலாளர்களின் நிலைமை பற்றி சொன்னேன். மாவட்ட  தனிப்பிரிவு  அலுவலகத்துக்கும் அப்போதைக்கப்போது தொழிலாளர்களின் நிலவரம் பற்றி தகவல் சொல்லிவந்தேன்.

           மறுவாரம்  தனிப்பிரிவு வாராந்திர  கூட்டத்திற்கு  சென்றேன். அங்கு தனிப்பிரிவு ஆய்வாளர் திரு விஜயராமச்சந்திரன் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். அப்பால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சி.துரைராஜ் M.A,B.L.,I.P.S. அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். அவர்களின் முகாம் எழுத்தர் திரு பி.பெரியசாமி அவர்களை சந்தித்தேன் . அவர்கள்  தாரங்கதாரா  கம்பனியில் துணைத்தலைவர் திரு எம்.எ.ராமசாமி அவர்களின் தனி உதவியாளர் திரு வரதன் எனது நண்பர் என்றும் நான் மிகவும் விசாரித்ததாக சொல்லுங்கள் என்று சொன்னார்கள். வாராந்திர கூட்டத்திற்கு தூத்துக்குடி தனிபிரிவு உதவி ஆய்வாளர் திரு ஜி.ஆஸ்டின், தலைமை காவலர் திரு D.A.செல்லப்பா, கோவில்பட்டி உதவி ஆய்வாளர் திரு நாகலிங்கம், தலைமைக்காவலர் திரு செல்லத்துரை பாண்டியன்,அம்பாசமுத்திரம் உதவி ஆய்வாளர் திரு வேலுசாமி,தலைமை காவலர் திரு சுப்பையா பாண்டியன், திருநெல்வேலி உதவி ஆய்வாளர் திரு பார்த்தசாரதி, தலைமைக்காவலர் திரு மலையாண்டி தேவர், திருவைகுண்டம் உதவி ஆய்வாளர் திரு U.சின்னசாமி ஆகியோர் வந்திருந்தார்கள். அந்த வாரத்தில் நடந்த தனிப்பிரிவு செய்திகளை அறிக்கை செய்து அறிவுரைகள் பெற்றோம்.

காவலர்  சீருடை  
           
                      ஒருசமயம் ஆறுமுகநேரி கெமிகல் கம்பெனியின் முன்னால் ரோட்டின் ஓரத்தில் இருவர் சண்டை போட்டு ஒருவனை அடித்து ரத்த காயங்களுடன் போட்டுவிட்டு போய்விட்டான்.அவன் ரோட்டோரத்தில் அழுது கொண்டிருந்தான். அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில்  வந்த P.R.C.செக்குரிட்டி ஆபீசர் நின்று அவனை பார்த்திருக்கிறார். அவன் அய்யா என்னை காப்பாற்றுங்கள் என்று அழுதிருக்கிறான். அவர் காக்கி சட்டை, பேன்ட் 
போலீஸ் ஆபீசர் தொப்பி, ஸ்டார், எல்லாம் அணிந்திருந்ததை பார்த்த அந்த காயமடைந்த நபர் அந்த செக்குரிட்டி ஆபிசரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என்று நினைத்துகொண்டார். அந்த செக்குரிட்டி ஆபிசர் நேராக காவல்நிலையம் சென்று விஷயத்தை சொல்லிவிட்டு போனார். அப்பால் போலிசார் வந்து அந்த நபரை கூட்டிசென்று வழக்கு பதிவு செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால் மறுநாள் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் திரு R.S.பாண்டியன் அவர்கள் மருத்துவமனைக்கு போய் அந்த காயம்பட்ட நபரை விசாரித்தார்கள். அந்த நபர், "நான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த வழியாக சப் இன்ஸ்பெக்டர் ரோட்டில் நின்று பார்த்துவிட்டு போய்விட்டார்" என்று சொல்லிவிட்டார். உடனே சப் இன்ஸ்பெக்டர் திரு தங்கரோஸ் அவர்களை ஆய்வாளர் கடுமையாக சாடினார். சப் இன்ஸ்பெக்டர் எவ்வளவோ எடுத்துசொல்லியும் ஆய்வாளர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் போலீஸ் தவிர வேறு எந்த அலுவலரும் காக்கி யூனிபாரம் போடக்கூடாது என்று சர்குலர் விடப்பட்டது.

ஆறுமுகநேரியில்        

               நான் மனைவி குழந்தையுடன் ஆறுமுகநேரியில் மாமனார் விட்டில் தங்க மிகவும் வசதியாக இருந்தது. மேலும் தனிபிரிவு ஆய்வாளர் திரு விஜயரமச்சந்திரன் அவர்கள் மனைவியின் பெரியம்மா வீடு ஆறுமுகநேரி  ராஜாமன்னியபுரத்தில் இருந்தது. அவர்கள் மக்கள் திரு செல்ல்லப்பா, திரு கங்கை ஆதித்தன், திரு A.V.ரவிபாண்டியன் (இவர் பின்னாளில் நீதிபதியாகி மறைந்தார்.) ஆகியோர் நல்ல தகவல்களை தருவார்கள். திரு கங்கை ஆதித்தன் அவர்கள் சங்கரேஸ்வரி மெடிக்கல் வைத்திருந்தார்கள். அந்த மெடிக்கல் ஷாப்பிற்கு நான் அடிக்கடி சென்று தகவல்களை சேகரித்து வருவேன். தட்ஷனமார நாடார் சங்க தலைவர் திரு P.S.ராஜா பலவேசமுத்து நாடார் அவர்கள் மக்கள் திரு விவேகானந்தன், திரு சதானந்தன் ஆகியோர்களும் நல்ல பல தகவல்களை தருவார்கள். மேலும் பேயன்விலையில் திரு பட்டுராஜன் அவர்களும் எனக்கு மிகவும் நல்ல நண்பர்கள்.

                     திருசெந்தூரில் காவலர் காலனியில் தலைமைக்காவலர் இல்லம் எனக்கு ஒதுக்கப்பட்டது. மறுநாள் மிளவிட்டான் சென்று அம்மாவை அழைத்துக்கொண்டு ஆறுமுகநேரி வந்து மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு காவலர் குடியிருப்பில் குடியேறினோம்.

                ஒருநாள் காவல்நிலையத்திலிருந்து தொலைபேசியில் மாவட்ட தனிப்பிரிவு ஆபிசுக்கு சில முக்கிய தகவல்களை சொல்லிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஸ்ரீவைகுண்டம் D.S.P, திரு பால் தாமஸ் அவர்கள் வந்தார்கள். உடனே அவருக்கு மரியாதையை செய்துவிட்டு மிண்டும் தொலைபேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். உடனே "அவர் மிகவும் கோபமாக என்னய்யா தகவல் சொல்லிக்கொண்டிருக்கிறாய். அதெல்லாம் வெளியே எங்கேயாவது இருந்து சொல்லவேண்டும்" என்று சொன்னார். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மறுநாள் ஸ்ரீவைகுண்டம் சென்று தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு செல்லமுத்து பாண்டியன் அவர்களை சந்தித்து தனிப்பிரிவு தகவல்களை சொல்லிவிட்டு D.S.P.திரு பால் தாமஸ் அவர்கள் கோபப்பட்ட விசயத்தையும் சொன்னேன். அவர் உடனே மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளரிடம் சொல்லிவிட்டார்.

             ஒரு வாரம் கழித்து திருச்செந்தூர் காவல் நிலையதிலிருந்து தனிப்பிரிவுக்கு மாற்றி எனக்கு திருசெந்தூரை தலைமையிடமாக இருக்கும்படி உத்தரவு வந்துவிட்டது. உத்தரவு கிடைத்த மறுநாளே திருச்செந்தூர் காவல் நிலையத்திலிருந்து  ரிலிவாகிவிட்டேன். எனது பணி திருசெந்தூர் சர்க்கிளுக்குட்பட்ட பகுதிகளில் தனிப்பிரிவு தகவல்களை சேகரித்து அனுப்பவேண்டும். கருமமே கண்ணாயினர் என்ற பழமொழிக்கிணங்க எனது பணியை திறம்பட செய்துவேந்தேன். 

தெய்வம் 

                     ஒரு சமயம் முருகன் கோயிலில் சின்னப்பா தேவர் அவர்களின் படமான தெய்வம் திரைப்பட படப்பிடிப்பு நடந்தது. அதைபர்க்க காவலர் குடி இருப்பிலுள்ள அனைவரும் போனார்கள் என்று என் மனைவி சொன்னாள். அன்று இரவு மனைவியுடன் படப்பிடிப்பை காண்பதற்கு சென்றிருந்தேன்.

                                                                                            அப்போது....

Friday 2 December 2011

திருச்செந்தூர் மாற்றம்!

அப்போது .....

நான் பயத்துடனே அவர்களை சந்தித்தேன். அவர்கள் முதலில் என்னை  நலம் விசாரித்தார்கள். பிறகு என்னிடம் "நீ  தனிப்பிரிவு தலைமை காவலராக வந்துவிடு. உன்னை திருசெந்தூர் மாற்றுகிறேன்" என்று சொன்னார்கள். "அய்யா!  ரொம்ப  சந்தோசம். தங்களது பொறுப்பின் கீழ் வேலை செய்ய நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும்" என்று சொல்லிவிட்டு சந்தோசமாக புளியரை வந்தேன். மனைவியிடம் சொன்னவுடன் அவளுக்கு நம் ஊர் பக்கத்திலேயே மாறுதல் கிடைப்பது பற்றி  ரொம்ப சந்தோசம். 

                    ஒரு வாரத்தில் மாறுதல் ஆர்டர் வந்தது. மாறுதல் ஆர்டர் கிடைத்த மறுநாளே புளியரையிலிருந்து ரிலிவானேன்.பெட்டி படுக்கையெல்லாம் கொஞ்சம்தான். எல்லாம் எடுத்துக்கொண்டு பஸ்சிலேயே புறப்பட்டோம்.  ஆறுமுகநேரி வந்து இரண்டு நாட்கள் இருந்துவிட்டு அப்பால் தூத்துக்குடிக்கு போனேன். சித்தி, சித்தப்பா எல்லோரிடமும் சொல்லிவிட்டு மீளவிட்டான்  போய் அம்மா, அண்ணன் ராமர், லக்ஷ்மணன் எல்லோரிடமும் சொல்லி விட்டு இரவு தங்கினேன். ஏழு நாட்கள் லீவு முடிந்து திருசெந்தூர் வந்து உதவி ஆய்வாளர் திரு தாமஸ் மாசில்லாமணி அவர்களிடம் ஆஜராகி பணிக்கு ரிப்போர்ட் செய்துகொண்டேன். ஆய்வாளர் திரு R.S.பாண்டியன் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். இவர் கொஞ்சம் கறாரான ஆபிசர்.சில நேரம் அதிகாரிகளை ஏடாகூடமாக பேசிவிடுவார். 

                    அப்பொழுது சர்க்கிள் ரைட்டராக அம்மன்புரம் புதுகுடியை சேர்ந்த திரு சண்முகவேலு என்பவர் இருந்தார். நான் வேலூரில்  காவலர் பயிற்சியில் இருக்கும்போது இவர் என்னுடன் பயிற்சியில் இருந்தார். அப்பொழுது நல்ல பழக்கம். மேலும் எனது அக்காள் திருமதி சண்முகக்கனியின் கணவர் திரு முனியசாமி அவர்களின் நெருங்கிய உறவினர் . ஆய்வாளர் அவர்கள் என்னை காவல் நிலையத்தில் ரைட்டராக இருக்கும்படி உத்தரவிட்டார்கள் . அதன்படி தலைமைக்காவலர் ரைட்டராக பணியாற்றினேன் . ஒரு மாதம் கழித்து  சர்க்கிள் ரைட்டர் சண்முகவேல் ஆய்வாளரிடம் லீவு கேட்டுள்ளார். மாதாந்திர குற்றகூட்டம் முடிந்தபின் லீவில் போ என்று ஆய்வாளர் சொல்லியுள்ளார். காவல் நிலையத்திலேயே ரைட்டருக்குத்தான் அதிக பொறுப்பு. அதனால்தான் சர்க்கிள் தலைமையிடத்து காவல் நிலையங்களில் தலமைகாவலர்களை ரைட்டராக நியமிப்பார்கள். காவலர்களுக்கு சம்பளம் கொடுப்பது பணபதிவேடு எழுதுவது எல்லாம் ரைட்டர்தான் செய்யவேண்டும். சர்க்கிள் ரைட்டருக்கு சம்பளம் கொடுத்து விடாதே. மாதாந்திர குற்றகூடம் முடித்தபின் கொடு என்று ஆய்வாளர் அவர்கள் என்னிடம் சொல்லிருந்தார். ஆனால் சர்க்கிள் ரைட்டர் முன்னாடியே சம்பளத்தை ஆய்வாளர் வாங்கிக் கொள்ளசொன்னார் என்று தவறாக சொல்லி சம்பளத்தை வாங்கிசென்றுவிட்டார். அதற்காக ஆய்வாளர் என்னை மிகவும் கடிந்துகொண்டார்.நானும் சர்க்கிள் ரைட்டரை காட்டிக் கொடுக்காமல் மவுனமாக இருந்துவிட்டேன்..

தாரங்கதார கெமிக்கல் கம்பெனி பிரச்சனை:


                       ஆறுமுகநேரி சாகுபுரம் தாரங்கதாரா கெமிக்கல் கம்பெனியில் 1969 போனஸ் பிரச்சனையில் திரு எஸ்.ஐ .சங்கரன் தலைமையில் உள்ள   கம்யுனிஸ்ட் சங்கத்தினர் கம்பெனி நிறுவனர் திரு எஸ்.கே.ஜெயின் அவர்களை அவர் அறையிலேயே ஏழு மணி நேரம் பூட்டி வைத்து  கேரோ செய்து அவரை போன்கூட பேச அனுமதிக்காமல் இருபது சதம் போனஸ் வேண்டும் என்று கையெழுத்து வாங்கிவிட்டார்கள். மறுநாள் சென்னைக்கு I.G. திரு F.V.அருள் அவர்களுக்கு போன் செய்து கம்பெனியில் நடந்த போனஸ் விவரங்களை சொன்னார்கள். அவர்கள் உடனே திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தெரிவித்தார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனே தாரங்கதாரா கெமிகல் கம்பெனிக்கு ஒரு தனிப்பிரிவு தலைமை காவலரை நியமித்து அங்கு தொழிலாளர்களின் நடவடிக்கையை கண்காணிக்கவேண்டும் என்று உந்தரவு போட்டார்கள். மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து என்னை அந்த டூட்டிக்கு  நியமித்து உத்தரவு  வந்தது. ஆறுமுகநேரி பக்கத்தில் உள்ள ஊர் என்பதால் மிகவும் சந்தோசம்.

                                                                                         அப்போது.........

Monday 14 November 2011

சினிமா படப்பிடிப்பு!

அப்போது...

                        தலையில் எந்த அடியும் படவில்லை. என்ன ஆச்சர்யம் அவன் விழுந்த அந்த இடத்தில் அந்த பாறை சற்று கீழே அமுங்கி இருந்தது. அதுபோல குழந்தையும் சிறிது நேரத்திலேயே சிரித்து விளையாட ஆரம்பித்தான். இறைவனுக்கு நன்றி.

மீண்டும் பதவி உயர்வு !


                           1969 ஜனுவரியில் எனக்கு மீண்டும் தலைமைக்காவலர் பதவி உயர்வு வந்தது. இப்பொழுது நான்  புளியரையில் அரிசி கடத்துபவர்களை கண்காணிக்கும் தணிக்கை சாவடிக்கு மாற்றப்பட்டேன். மாறுதல்  ஆர்டர் கிடைத்த மறுநாளே ஆய்வாளர் திரு விஜயரமசந்திரன் அவர்களிடம் அறிவுரைகள் பெற்று ஊருக்கு புறப்பட்டேன். ஆறுமுகநேரி போய் பணியில் சேருவதற்காக வழங்கும் விடுப்பு (Joining Time leave) ஏழு  நாட்களையும் ஆறுமுகநேரியிலும்,மீளவிட்டானிலும் கழித்துவிட்டு நான்மட்டும் புளியரைக்கு சென்றேன். அங்கு பணியில் சேர்ந்ததும் புளியரை மலைக்குகைக்குள் ரயில் செல்லும் பாதை (Tunnel Check post) ஆரம்பிக்கும் இடத்தில் மலைக்காட்டுக்குள் ஒரு ஓலை செட்டு அமைத்து அரிசியை கேராளாவுக்கு கடத்துபவர்களை கண்காணிக்கவேண்டும். என்னுடன் காவலர்கள் வெங்கட்ராமன், கோதண்டராமன், பிச்சையா தேவர் ஆகியோரும் இருந்தார்கள். அவ்வப்போது சிவில் சப்ளை சி.ஐ.டி. ஆய்வாளர் திரு ஹென்றி பாண்டியன் அவர்கள் எங்களை செக் செய்ய வருவார்கள். அரிசி கடத்துபவர்கள்
இரவில் மலைமேல் கரடு முரடான வழியாகத்தான் கடத்துவார்கள். 

                     புளியரையில் திரு சுப்பையா தேவர் அவர்களுக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில் வீடு பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் லீவு எடுத்துக்கொண்டு ஊரில் போய் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வீட்டு உபயோகத்திற்கு வேண்டிய கொஞ்சம் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்தோம். 

செக் போஸ்ட் வேலை!  
                   
                     ஒருநாள் காவலர் பிச்சையா தேவரை செக் போஸ்டில் வைத்துவிட்டு நானும், காவலர்கள் வெங்கட்ராமன், கோதண்டராமன் ஆகியோர் மலை உச்சிக்கு போய் இரவு ஒரு மணிக்கு பதுங்கி இருந்தோம். காவலர் கோதண்டராமன் ஒரு பீடிபிரியர் புகை பிடிக்காமல் இருக்கமாட்டார். இந்த பீடிப்புகை வாசனையை உணர்ந்தே கடத்தல்காரர்கள் ஓடிவிடுவார்கள். அன்றும் அதைப்போல் ஓடிவிட்டனர்.அவர்கள் கொண்டுவந்த அரிசி மூட்டைகளை ஆங்கங்கே போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.              


பிடிபட்ட அரிசி மூட்டைகள்!

                                   விடியும்வரை மலையிலேயே காத்திருந்துவிட்டு காலையில் புளியரைக்கு போய் கூலியாட்களை அழைத்துவந்து அரிசிமூட்டைகளை அந்த மலையின் செடி கொடிகளுகிடையில் தேடி எடுத்தோம். ஏழு சிறு மூட்டைகள்தான் கிடைத்தது. அவைகளை எடுத்துவந்து கோர்ட்டுக்கு அறிக்கை தயார்செய்து செங்கோட்டை கோர்ட்டுக்கு கொண்டுபோனோம்.கனம் கோர்ட்டார் அவர்கள் "ஏன் கைதிகளை பிடிக்கவில்லை" என்று கேட்டார். இரவு நேரமானதாலும் மலையுச்சி செடிகொடிகள் நிறைந்த காடு என்பதாலும் அவர்கள் தப்பிவிடுகிறார்கள். என்று சொன்னேன். உடனே கோர்ட்டார் அவர்கள் என்னை சிறிது நேரம் உற்று கவனித்தார். திடீரென்று எழுந்து அவர் அறைக்கு சென்று விட்டார். 

                               சற்று நேரத்தில் மதிய இடைவேளையின் போது கோர்ட் சேவகர் வந்து "உங்களை ஐயா அழைக்கிறார். வாருங்கள்" என்று அழைத்தார். கணம் நீதிபதி ஐயா அவர்கள் எதற்காக என்னை அழைக்க வேண்டும் என்று குழப்பமாக இருந்தது. கோர்ட் சேவகரை வருகிறேன் போங்கள் என்று அனுப்பிவிட்டு குழப்பமாக அவரை சென்று பார்த்தேன்.

நீதிபதி  ஐயா!

                     அப்போது அவர் " நீர் புதுக்கடையில் இருந்த ராமசாமி தானே! என்னை தெரியவில்லையா ? என்று கேட்டார்.  அப்போதுதான் எனக்கு தெரிந்தது. குழித்துறை கோர்ட்டில் இணையம் புத்தன்துறை வழக்கில் எதிரிகளுக்காக வாதாடிய வக்கீல் திரு தியாகராஜன் என்பது தெரிந்தது. "ஆ! ஐயா!  நீங்களா! எப்போது நீதிபதியானீர்கள்?"  என்றேன்.  உடனேயே என்னை உட்காரவைத்து புதுக்கடை SI சங்கரபாண்டியன் மற்றும் ஆய்வாளர் பாலகிருஸ்ணன் நாயர் ஆகியோர்களை நலம் விசாரித்தார். அப்பால் அரிசி மூடைகளை ஒப்படைத்துவிட்டு புளியரைக்கு வந்தேன். 

சினிமா படப்பிடிப்பு!

                    ஒரு நாள் புளியரை ரயில் நிலையத்தில் சினிமா படபிடிப்பு நடக்கிறதாம் போய் பார்ப்போமே என்று என் மனைவி கூறினாள். சரி என்று குழந்தையை எடுத்துகொண்டு  புளியரை ரயில் நிலையம் போனோம். அங்கே இந்தி நடிகை ஹேமமாலினி நடித்த ஒரு இந்தி படப்பிடிப்பை பார்த்தோம். தெரிந்த போலீஸ்காரர்கள்  உதவியுடன் மிகவும் அருகில் நின்று படப்பிடிப்பை ரசித்துக்கொண்டிருந்தோம்.  எனது குழந்தையை பார்த்த நடிகை ஹேமமாலினி அருகில் வந்தார் குழந்தையை தூக்க முயற்சித்தார்.  அவன் போகவில்லை .  அன்று வீட்டுக்கு வந்தவுடன் என் மனைவி எல்லோரிடமும் அதை சொல்லி சொல்லி பெருமை பட்டுக்கொண்டிருந்தாள்.

                      அன்று மலையில் செங்கோட்டை அருகிலுள்ள திருமலை குமாரசாமி கோயிலுக்கு போனோம். எனது இரண்டு வயது மகன் முத்துகுமரன் அப்போதெல்லாம் கோவிலை சுற்றி வருவதென்றால் அவன் மிகவும் வேகமாக "முருகா! முருகா!" என்று சொல்லிக்கொண்டே  தத்தித்தத்தி நடந்து கோவிலை சுற்றி வருவான். கர்ப்பகிரகத்தில் சாமிக்கு மகன் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு வந்தோம்.

புதிய குழப்பம்!.
                      மறுநாள் நான் டூட்டி முடிந்து வீட்டுக்கு வந்தேன் அப்பொழுது ஏன் மனைவி சொன்னாள். ஒரு காவலர் திருநெல்வேலி மாவட்ட தனிபிரிவில் இருந்து வந்ததாகவும் தனிப்பிரிவு ஆய்வாளர் திரு விஜயராமச்சந்திரன் அவர்கள் உடனேயே என்னை வரச்சொன்னதாக சொல்லிவிட்டு சென்றதாக சொன்னாள். என்ன விஷயம் என்று சொல்ல வில்லை . அன்று இரவு முழுதும் தூக்கமே இல்லை . ஒரு வேளை அம்பாசமுத்திரம் சர்க்கிள் ஆபீசில் நாம் எழுத்தராக இருக்கும்போது  பதிவேட்டில் ஏதேனும் தப்பு நடந்து விட்டதோ என்றெல்லாம் நினைத்து வருந்திகொண்டிருந்தேன். அப்பொழுது என் மனைவி எல்லாம் நன்மைக்காகத்தான் இருக்கும். கவலைப்படாதீர்கள் என்று சொன்னாள் காலையில் முதல் பஸ்ஸில் திருநெல்வேலி புறப்பட்டேன். திருநெல்வேலி தனிப்பிரிவு அலுவலகம் சென்று ஆய்வாளர் திரு விஜயராமச்சந்திரன் அவர்களை சந்தித்தேன்.

                                                                                                                 அப்போது..........

Saturday 12 November 2011

மகன் முத்துக்குமரன் எழுந்தான்! !

அப்போது.....
                       
                         சிறிது நேரத்தில் என் மனைவி அவளுடைய சொந்த பந்தங்களுடன் வந்தாள். சில காரணங்களினால் தாமதமானதை பயத்துடன் கூறினாள் . அதுவும் சரிதான் என்று சமாதானம் ஆகினேன். 

                      காரியங்கள் முடிந்து சில நாட்களில் அண்ணன் லட்சுமணன் வீட்டில் அம்மா இருந்துகொண்டார்கள். நான் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அம்பாசமுத்திரம் வந்தேன். கூடவே என் மாமியாரும் வந்தார்கள்.  அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவில் சிவன் ஏட்டையா வீட்டில் வாடகைக்கு இருந்தோம். 

காவல் நிலையத்தில் .......

             சில மாதங்களில் ஆய்வாளர் திரு காசி அருணாசலம் அவர்கள் மாற்றப்பட்டு திரு விஜயராமச்சந்திரன் அவர்கள் ஆய்வாளராக பொறுப்பேற்றார்.அப்பொழுது அம்பாசமுத்திரம் துணை கண்காணிப்பாளராக  இருந்த திரு கே.குருவையா அவர்களுக்கும் ஆய்வாளர் திரு விஜயராமசந்திரன் அவர்களுக்குமிடையே நல்ல அபிப்ராயம் உண்டு. இந்த  ஆய்வாளரிடம்  தான் நான் நல்ல பல விசயங்களை தெரிந்து கொண்டேன். அதிகாரிகளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும், யார் யாரிடம்  எப்படி பேசவேண்டும் என்பதுபோன்ற நிறைய விசயங்களை கற்றுக்கொடுத்தார். சில தினங்களில் அவர்கள் குடும்பமும் வந்துவிட்டது. கீழரதவீதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள். அவர்கள் மனைவியின் சொந்தஊர் திருநெல்வேலி. அங்கு திரு சிவசுப்ரமணி நாடார்.Ex.M.L.C.அவர்கள் மகள். இவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் இருந்தார்கள். எல்லோரும் மிகவும் நல்லவர்கள். இவர் ஆய்வாளராக இருந்தபோது சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.  காரணம்  இவருடைய அறிவுரையின்படி சர்க்கிளிலுள்ள எல்லா உதவி ஆய்வாளர்களும் மிகவும் திறமையாக பணியாற்றி குற்றங்கள் அதிகம் நடக்காமல் பார்த்துக்கொண்டார்கள்.

கைதியின் மரணம் !

                           ஒரு தடவை விக்கிரமசிங்கபுரத்தில் கைதி ஒருவன் தற்கொலை செய்துகொண்டதாக விக்கிரமசிங்கபுரம் உதவி ஆயிவாளர் திரு குருசுமுத்து அவர்கள் காலையிலேயே ஆய்வாளர் திரு விஜயரமசந்திரன் அவர்களை பார்த்து மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டார். அப்பொழுது அவருக்கு சொன்ன அந்த அறிவுரைகள் பின்னாளில் நான் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் ஆய்வாளராக இருந்தபோது எனக்கு மிகவும் உதவியாகவும் பொதுமக்களிடம் நற்பெயரையும் பெற்றுத்தந்தது.மனிதன் செல்வம், செல்வம் என்று ஆசைபடுவது இயற்கைதான். ஏனென்றால் ஒருவனை செல்வத்தை வைத்துத்தான் எடைபோடுகிறார்கள்.மனிதன் செல்வத்தை சேர்த்து எவ்வளவு உச்சிக்குபோனாலும் அவன் அங்கேயே தங்கிவிடமுடியாது.

                         ஆய்வாளர் திரு விஜயரமசந்திரன் அவர்கள் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக அன்பாகவே நடந்துகொள்வார். தனக்கு கீழ் பணிபுரியும் அனைவருக்கும் அறிவுரைகள் வழங்குவதில் சற்று கடுமையாகவும் இருப்பார்.  காவல்நிலையங்களுக்கு ஆய்வு செய்ய போகும்போது என்னையும் கூடவே அழைத்து செல்வார்.அவரது ஆய்வு அறிக்கையை நான் குறிப்பெடுத்து கொள்வேன்.

மேற்படிப்பு!

                          எட்டாவது வகுப்பே படித்திருந்த நான் மேற்கொண்டு படித்து எப்படியாவது ஒரு பட்டம் வாங்கவேண்டும் என்ற ஆவல் என் அடிமனதில் துளிர்விட ஆரம்பித்தது. அந்த காலகட்டத்தில் காவலர் வேலைக்கு எட்டாவது வகுப்பு மட்டும் படித்திருந்தாலே போதும். அனால் அவரது திறமையினால் பதவி உயர்வு கிடைக்கும். அம்பாசமுத்திரத்தில் ஒரு தனியார் பயிற்சி கல்லூரியில் (Tutorial college) சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். மேலும்  ஆய்வாளரின் அறிவுரையின்படி தட்டச்சு பயிற்சியிலும் (டிபே writting) சேர்ந்தேன். ஆனால்  நேரம்தான் ஒத்துவரவில்லை. அதனால் அந்த பயிற்சி கல்லூரியில் நான் எனக்கு வசதியான நேரத்தில் எப்பொழுது வந்தாலும் ஒரு மணி நேரம் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என்று அந்த பயிற்சி கல்லூரி நடத்தும் நிறுவனரிடம் அனுமதி பெற்றேன். அதன்படி மிகவும் சிரத்தையோடும், அக்கறையோடும் பயின்று வந்தேன். 

மகன் முத்துக்குமரன் விழுந்தான்!   
      
                   ஒருநாள் எனது ஒன்றரை  வயது மகன் முத்துக்குமரனை சைக்கிள் பின்சீட்டில் உட்காரவைத்து நான் சைக்கிளை தள்ளினேன். எனது மகன் பின்சீட்டிலிருந்து மல்லாக்க கீழே விழுந்தான். கீழே கல்பாறை அதன்மேல் விழுந்தவுடன் நான் கதறிவிட்டேன். ஐயோ என்று அலறி சைக்கிளை அப்படியே கீழே போட்டுவிட்டு குழந்தையை தூக்கினேன். "தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை கீழே விழுந்து விட்டானா?" என்று  என் மனைவியும் வீட்டிக்குள்ளிருந்து ஓடிவந்தாள். என் மகனை தூக்கி தலையில் தடவி பார்த்தேன். மனது முழுதும் வேதனை. துக்கம் தொண்டையை அடைத்தது. 
                                                                                                               அப்போது......      

Friday 11 November 2011

மகன் முத்துகுமரன் பிழைத்தான்!

அப்போது .......... 

                      சிறிது நேரம் கழித்து பேயன்விளை போய் டாக்டர் அய்யாதுரை என்பவரை கூட்டிவந்தேன். அவர் குழந்தையின் காதைப்பிடித்து தூக்கினார். அப்பொழுதும் குழந்தை அழவில்லை. ஆ....என்று வாயை திறந்தான். ஆனால் அப்பொழுதும் குழந்தை அழவில்லை. உடனே ஒரு ஊசி போட்டார். டாக்டரிடம் குழந்தை எப்படி இருக்கிறது என்று கேட்டேன். நாளைக்கு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு போய் விட்டார். மருத்துவச்சி அம்மாவோ "பயப்படவேண்டாம். டாக்டர் என்ன டாக்டர் நான் சொல்கிறேன். இன்று இரவே குழந்தை அழுவான் பால் குடிப்பான். நான் இதுபோல நூறு குழந்தைகளை பார்த்திருக்கிறேன். பயப்படவேண்டாம்" என்று சொன்னார்கள்.

அழுது சிரிக்கவைத்தான்! 

                          அது போலவே குழந்தை இரவு நன்றாக அழுதான். பாலும் குடிக்க ஆரம்பித்தான்.அப்போது தான் எல்லோருடைய முகத்திலும் சிரிப்பை பார்க்க முடிந்தது. எங்கள் எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம். மறுநாளே தூத்துக்குடி சென்று சித்தப்பா, சித்தி, மீளவிட்டானில் அம்மா,  சின்னக்கா, அண்ணன்கள் மற்றும் எல்லோரிடமும் குழந்தை பிறந்த விஷயத்தை  சொல்லிவிட்டு நல்லூருக்கு போய் பெரியக்கா, மச்சான் திரு முனியசாமி அவர்களிடமும் சொல்லிவிட்டு ஆறுமுகநேரி வந்தேன். விருதுநகருக்கு தங்கை பாப்பாவுக்கும் குழந்தை பிறந்த செய்தியை லெட்டர் எழுதினேன். அனைவரும் மறுநாளே வந்து குழந்தையை பார்த்துவிட்டு ஆசீர்வாதம் செய்து சென்றார்கள். ஒரு வாரம் குழந்தையுடன் நாட்கள் எப்படி சென்றதென்றே தெரியவில்லை. லீவு முடிந்து அம்பாசமுத்திரம் வந்தேன்.

சர்க்கிள் ஆபிஸ் எழுத்தர்!

                           வந்தஉடன் என்னை சர்க்கிள் ஆபீசில் எழுத்தராக இருக்கும்படி ஆய்வாளர்  சொன்னார். அதன்படி எழுத்தராக பணிபுரிந்தேன். ஏற்கனவே சர்க்கிள்  எழுத்தராக இன்னொரு ராமசாமி நியமிக்கப்படிருந்தார். அவருக்கு உதவியாக தலைமை காவலர் திரு தில்லை சிதம்பரம் அவர்களுடன் நானும் சேர்ந்து வேலை பார்தேன். இந்த சர்க்கிளுக்கு அம்பாசமுத்திரம் , விக்கிரமசிங்கபுரம், பாப்பாகுடி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி ஆகிய காவல் நிலையங்களும்  மாஞ்சோலை   மணிமுத்தாறு ஆகிய புறக்காவல் நிலையங்களும் சேர்ந்தது. 

                               அம்பாசமுத்திர காவல் நிலையத்திற்கு திரு குளத்து அய்யர் மாற்றப்பட்டு திரு குமாரவேல் அவர்கள் உதவி ஆய்வாளராக இருந்தார். விக்கிரமசிங்கபுரத்திற்கு திரு குருசுமுத்து அவர்களும் பாப்பாகுடிக்கு திரு பால்தேவதாஸ் அவர்களும் வீரவனல்லூருக்கு திரு முகமது காசிம் அவர்களும் சேரன்மகாதேவிக்கு திரு சுந்தரம்பிள்ளை அவர்களும் உதவி ஆய்வாளராக இருந்தார்கள். மாஞ்சோலை புறக்காவல் நிலையத்திற்கு திரு முருகையா அவர்களும் மணிமுத்தாறு புறக்காவல் நிலையத்திற்கு திரு ராஜாராம் நாயுடு அவர்களும் தலைமை காவலர்களாக இருந்தார்கள். 

                                 இவர்கள் அனைவரும் அவர்கள் காவல் நிலைய எழுத்தர்களும் ஒவ்வொரு  வாரமும் நடக்கும் வாராந்திர கூட்டத்திற்கு சர்க்கிள் ஆபீஸ் வரவேண்டும். அப்பொழுது குற்ற வழக்குகளை பற்றியும் கண்டுபிடிப்பதில் உள்ள முன்னேற்றம் பற்றியும் ஆராயப்படும். 

அக்கா இறந்தார்!

                              எனது மகன் முத்துகுமரன் பிறந்த மூன்றாவது மாதம் நல்லூரில் எனது பெரிய அக்கா திடீரென இறந்து விட்டார்கள் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். பன்னீர்செல்வம் - பதினைந்து வயது . சித்திரைக்கனி - ஏழு வயது . கந்தசாமி - ஐந்து வயது. உடனேயே லீவு சொல்லிவிட்டு நல்லூருக்கு சென்றேன். நான் நல்லூருக்கு வந்த பிறகும் கூட பக்கத்து ஊரில் இருந்த என் மனைவியும் குழந்தையும் அங்கு வந்து சேரவில்லை. எனக்கு கோபமாகவும் குழந்தைக்கு உடம்பு சரியில்லையோ என்று கவலையாகவும் இருந்தது.

                                                                                                           அப்போது.........